மனிதர்கள் கையில இருக்கும் போனை லபக் என தூக்கிய குரங்கு… அப்புறம் நடந்த கூத்தை பாருங்க…. பொன்னேரியில் பரபரப்பு…!

By Nanthini on புரட்டாதி 25, 2026

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஜார் பகுதியில் கடை நடத்தி வரும் பிரதீஷ்துரை (38) என்பவரது வீட்டிற்குள் புகுந்த குரங்கு ஒன்று, அவர் கையில் வைத்திருந்த ஸ்மார்ட்போனை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்கள் எந்நேரமும் செல்போனை கையில் வைத்திருப்பதைப் பார்த்து ஈர்க்கப்படும் குரங்குகள், உணவைப் போல செல்போன்களையும் பறிக்கத் தொடங்கியுள்ளதன் வெளிப்பாடாக இச்சம்பவம் பார்க்கப்படுகிறது. வீட்டில் கட்டிலில் படுத்துக்கொண்டு செல்போன் பார்த்துக் கொண்டிருந்த பிரதீஷிடம் இருந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் குரங்கு போனைப் பிடுங்கிக்கொண்டு ஓடியுள்ளது.

   

பதறிப்போன பிரதீஷ்துரை குரங்கை விரட்டிச் சென்றபோது, அது வேகமாக ஓடி மரத்தில் ஏறி, அருகிலுள்ள வீடுகளின் கூரைகள் மற்றும் மாடிகளில் தாவியது. செல்போனை மீட்பதற்காக பிரதீஷ் அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டபோது, ரிங்டோன் சத்தம் கேட்டு கோபமடைந்த குரங்கு, போனின் கவரைக் கழற்றி வீசியதோடு செல்போனைக் கடிக்கவும் தொடங்கியது. இதைக் கண்டு சுற்றியிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்க்கக் கூட, அடுத்தடுத்து மூன்று வீடுகளின் மாடிகளுக்குத் தாவிய குரங்கிடமிருந்து செல்போனை எப்படி மீட்பது என்று தெரியாமல் பிரதீஷ் பரிதவித்தார்.

   

சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, பிரதீஷ்துரை ஒரு சாதுரியமான உபாயத்தைக் கையாண்டார். குரங்கை நோக்கி அவர் வாழைப்பழத்தை வீச, உணவைக் கண்டதும் மனம்மாறிய குரங்கு கையில் வைத்திருந்த செல்போனைக் கீழே வீசிவிட்டு வாழைப்பழத்தைக் கவ்விக் கொண்டு சென்றது. ஒருவழியாக செல்போன் திரும்பக் கிடைத்தாலும், குரங்கு கடித்ததில் அதன் டிஸ்ப்ளே உடைந்திருந்தது. இருப்பினும், தனது செல்போன் மீண்டதே போதுமென பிரதீஷ் பெருமூச்சு விட்டார்.

 

பொன்னேரி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே குரங்குகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கூட்டமாக வரும் குரங்குகள் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து தின்பண்டங்களையும் பொருட்களையும் சேதப்படுத்தி வருவதால், மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு கூண்டுகள் வைத்து குரங்குகளைப் பிடித்துச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.