திரைத்துறையில் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நாயகியாக வலம் வந்தாலும், நடித்த அத்தனை படங்களையும் வெற்றிப்படங்களாக்கிக் காட்டியவர் நடிகை கார்த்திகா. கமல்ஹாசனின் ‘நாயகன்’ மற்றும் ‘பூவிழி வாசலிலே’ போன்ற படங்களில் நடித்த இவர், புகழின் உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விடைபெற்றார். குறிப்பாக, மலையாளத் திரையுலகில் மோகன்லால் – கார்த்திகா ஜோடி அக்கால ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாகக் கொண்டாடப்பட்டது.
கடந்த 1987-ல் ‘ஜனவரி ஒரு ஓர்மா’ படப்பிடிப்பின் போது, கொடைக்கானல் சூசைட் பாயிண்ட் பகுதியில் கார்த்திகா நூலிழையில் உயிர் தப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. காட்சிக்காக அவர் குதிப்பது போல் பாவனை செய்தபோது, எதிர்பாராத விதமாகக் கால் நழுவ, நடிகர் மோகன்லால் மின்னல் வேகத்தில் அவர் கரத்தைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றியுள்ளார். ஒரு மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்ட இந்தத் தருணத்தை அப்படத்தின் கதாசிரியர் இன்றும் வியப்புடன் கூறியுள்ளார்.
