மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக, சென்னையில் பா.ரஞ்சித் தலைமையிலான நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பா.ரஞ்சித், தவெக அரசு பதவியேற்று இரு மாதங்களாகியும் தலித் சமுதாய பிரச்சனைகளுக்கு தலித் அமைச்சர்கள் குரல் கொடுக்கவில்லை என்றும், சேலத்தில் அம்பேத்கர் சிலையைத் திறக்காமல் தாமதிப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், மாநிலத்தில் ஏழு தலித் அமைச்சர்கள் இருந்தும் அவர்கள் தங்களின் பிரதிநிதிகளாகச் செயல்படவில்லை என்று சாடினார்.
பா.ரஞ்சித்தின் இந்தப் பேச்சிற்குத் திரைப்பட இயக்குநர் மோகன்.ஜி தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். சாதி ஒழிப்பு பற்றிப் பேசும் பா.ரஞ்சித், குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அமைச்சர் தனது சமுதாயத்திற்கு மட்டுமே குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது பெரும் முரண்பாடு என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும், அமைச்சர் என்பவர் அனைத்து தரப்பு மக்களுக்குமான பொதுவான பிரதிநிதி என்றும், சாதி அடிப்படையில் மட்டுமே செயல்பட முடியாது என்றும் கூறிப் பதிலடி கொடுத்துள்ளார்.
