மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஏற்கனவே ‘டார்ச் லைட்’ சின்னத்தை ஒதுக்கியிருந்தாலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி மாநிலம் முழுவதும் பொதுச் சின்னத்தைப் பெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் 5% தொகுதிகளில் (தமிழகத்தில் சுமார் 12 தொகுதிகள்) போட்டியிட வேண்டும். ஆனால், திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மநீம கட்சிக்கு ஒற்றை இலக்கத்திலேயே தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. மக்கள் நீதி மய்யம் குறைந்த தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில், அக்கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னம் பொதுச் சின்னமாக வழங்கப்படாது.
இந்தச் சூழலைச் சமாளிக்க, மநீம வேட்பாளர்களை திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வைக்க திமுக தலைமை திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்த நிலையில், தற்போது சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது உறுதியானால், மநீம தனது தனித்துவமான அடையாளமான டார்ச் லைட் சின்னத்தை இந்தத் தேர்தலில் இழக்க நேரிடும்.
