தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன், தனது உறவினர் ஒருவருடன் தொலைபேசியில் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுக்கும் வகையிலான ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தனிப்பட்ட மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களை அந்த உறவினர் பதிவிட்டதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் உறவினர், தனது வாட்ஸ்அப் பக்கத்தில் கலப்புத் திருமணம் மற்றும் குடும்பப் பின்னணி தொடர்பான கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன், அவரைத் தொலைபேசியில் அழைத்து, “எந்த தைரியத்தில் என் குடும்ப விவகாரத்தைப் பொதுவெளியில் இழுத்தீர்கள்?” எனக் கண்டித்துள்ளார். அதற்கு அந்த உறவினர், திராவிடம் கொண்டு வந்த கலப்புத் திருமணம் குறித்த பொதுவான வரலாற்றையே பதிவிட்டதாகக் கூறிய போதிலும், எம்.எல்.ஏ அதை ஏற்க மறுத்துத் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உரையாடலின் போது மேலும் ஆத்திரமடைந்த சட்டமன்ற உறுப்பினர், காவல் துறை அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்துவிடுவேன் என்றும், உடனடியாக அந்த ஸ்டேட்டஸை நீக்காவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். கட்சி மாறுதல்கள் மற்றும் குடும்பப் புகைப்படங்கள் சார்ந்த பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, குடும்பச் சூழலைக் கருதி அந்தப் பதிவை நீக்குவதாக உறவினர் ஒப்புக்கொள்வதுடன் அந்த தொலைபேசி உரையாடல் நிறைவடைகிறது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு மாற்றாகத் தூய்மையான அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இளம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், குடும்ப உறவினரிடமே காவல் துறையைக் கொண்டு மிரட்டும் வகையில் பேசியுள்ளது இணையத்தில் கடுமையான விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், இந்த வைரல் ஆடியோவில் இருப்பது சபரி ஐயங்கரன் தானா என்பது குறித்தோ அல்லது இந்த விவகாரம் குறித்தோ தவெக தலைமை மற்றும் எம்.எல்.ஏ தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
