“சோத்துல உப்பு போட்டு சாப்பிடுபவரா இருந்தா… அத பண்ணுங்க”…. திமுக கவுன்சிலருக்கு தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பகிரங்க சவால்…!

By Nanthini on ஐப்பசி 3, 2026

Spread the love

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் அண்ணல் காந்தியடிகளுக்கு உரிய மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மேலமாசி வீதியில் உள்ள காதி கிராமத் தொழில் வாரிய விற்பனை நிலையத்தில் அமைந்திருக்கும் காந்தியடிகளின் சிலைக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா மற்றும் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கல்லாணை ஆகியோர் மாலை அணிவித்து, உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, காந்தி ஜெயந்தியை ஒட்டி காதி கிராப்ட் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனையையும் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.

நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மத்திய எம்.எல்.ஏ. முஸ்தபா பேசுகையில், “மனிதர்களுக்கும் ஆடைகளுக்குமான இடைவெளியைக் குறைக்கும் வகையில் காந்தியடிகள் அரையாடை உடுத்தத் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பூமி மதுரை” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார. தொடர்ந்து அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கிடையே தான் பிரதான போட்டியே நிலவுவதாகவும், அக்கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், “முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடனில் ஆட்சி நடத்தியவர்; அதிமுக தற்போது முகவரியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது” என்றும் அவர் காட்டமாக விமர்சித்தார்.

   

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த முஸ்தபா, “மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகமே பிரதானமாக உள்ளது. பாஸ் விற்பனை நடந்திருந்தால் அதற்கு திமுகவினரே பொறுப்பு. பாஸ் விற்பனை செய்யப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகக் கூறும் கவுன்சிலர் ஜெயராமன், உண்மையாகவே மானமும் ரோஷமும் உள்ளவராக இருந்தால், சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடுபவராக இருந்தால் அந்த வீடியோ, ஆடியோ ஆதாரங்களை உடனடியாக வெளியிட வேண்டும்; அதைவிட்டுவிட்டு அரசியல் நாடகம் ஆடக்கூடாது” என்று பகிரங்க சவால் விடுத்தார்.

   

தொடர்ந்து பேசிய மதுரை வடக்கு எம்.எல்.ஏ. கல்லாணை, “மகளிருக்காகத் தொடங்கப்பட்டுள்ள ‘வெற்றி பயண திட்டம்’ சாதாரண திட்டமல்ல; வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் சகோதரிகளுக்கு இது பெரும் உறுதுணையாக இருக்கும். இதன் மூலம் அவர்களின் போக்குவரத்துச் செலவு மிச்சமாகி முழு ஊதியமும் கையிருப்பில் தங்கும். தாய்மார்களின் சிரமத்தைக் குறைக்கவே இத்திட்டத்தைக் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்” என்றார். நிறைவாக, அரசு நிறுவனங்களான காதி கிராப்ட் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கதர் ஆடைகளை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.