சென்னை வளர்ச்சி மையத்தின் (MIDS) பொருளாதார வல்லுநரும், பேராசிரியருமான கலையரசன், சமீபத்தில் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். தேசிய சராசரியை விட விலைவாசி அதிகமாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதுடன், அரசைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தார். இந்தச் சூழலில், அவர் வசிக்கும் அடையாறு வீட்டுக்கு அதிகாலை 5 மணியளவில் சாதாரண உடையில் சென்ற காவல்துறையினர், எந்தவொரு முறையான முன்னறிவிப்பும் இன்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
பல்லாவரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ.-வின் இன்ஸ்டாகிராம் பதிவில் தவறான கருத்து பதிவிடப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்றும், தான் எந்தக் கருத்தையும் பதிவிடவில்லை என்றும் பேராசிரியர் கலையரசன் திட்டவட்டமாக மறுத்தார். நீண்ட நேர விசாரணைக்குப் பின் வீடு திரும்பிய அவர், தமக்கு நேர்ந்த அவமானம் மற்றும் அத்துமீறல் குறித்துத் தமிழக காவல்துறை டி.ஜி.பி.-க்குக் கடிதம் எழுதியதுடன், இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பொருளாதார நிபுணர் கலையரசனைத் தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்துப் பேசிய நிலையில், தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விமர்சனங்களைக் கருத்துகளால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, காவல்துறை நடவடிக்கைகளால் அல்ல என்று அவர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
ஃபேக் ஐடி (Fake ID) மூலம் பதிவிடப்பட்ட கமெண்டைக் காரணம் காட்டி, அதிகாலையில் ஒரு கல்வியாளரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், இந்தச் சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளைக் கண்டறிவதோடு, அத்துமீறிச் செயல்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைத் தான் அரசுக்கு நினைவூட்டுவதாக அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
