நாம் தினமும் பலமுறை பயன்படுத்தும் பாத்ரூமை சுத்தமாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் அப்படி கிளீனிங் செய்யும்போது இந்த தவறுகளை செய்தால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக பாத்ரூமில் ஜன்னல், கதவுகளை மூடிவிட்டு சுத்தம் செய்தால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக ரசாயனம் கலந்த கிளீனரை பயன்படுத்தும் போது அது இன்னும் ஆபத்தை விளைவிக்கும். மூடிய குளியலறையில் விஷ வாயுக்கள் வேகமாக பரவி கடும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பினாயில், பிளீச்சிங் பவுடர் ஆசிட் கிளீனர்கள் போன்றவற்றில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்தும் போது விஷ வாயுக்கள் காற்றில் கலக்கின்றன. பாத்ரூம் கதவுகள் ஜன்னல்கள் மூடி இருந்தால் அவை உள்ளேயே தங்கி விடுகின்றன. இதனால் சுத்தம் செய்பவர் அதை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். குழந்தைகள் முதியவர்கள் கர்ப்பிணிகள் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது.
தலைவலி கண் எரிச்சல் தொண்டை எரிச்சல் வாந்தி மயக்கம் போன்ற பிரச்சனைகள் வரலாம். ஆசிட் கிளீனருடன் பிளீச்சிங் பவுடரை கலப்பதால் குளோரின் வாயு வெளிப்படுகிறது. இது மிகவும் விஷத்தன்மை வாய்ந்த வாயு. இது மிகவும் ஆபத்தானது. பாத்ரூம் சுத்தம் செய்யும்போது நமது சுவாசத்தின் வேகம் அதிகரிக்கிறது. அப்போது இது போன்ற விஷ வாயுவை சுவாசித்தால் அது நேரடியாக நுரையீரலுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் நுரையீரல் தொற்றுக்கள் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா தீவிரத்தை அதிகரிக்க கூடும். குளியலறையை சுத்தம் செய்வதற்கு முன்பு கண்டிப்பாக ஜன்னல்கள் கதவுகளை திறந்து வைக்க வேண்டும். குளியல் அறையில் எக்ஸாஸ்ட் பேன் இருந்தால் அதையும் ஆன் செய்ய வேண்டும். காற்றோட்டம் சீராக இருக்க வேண்டும் நல்லது. முடிந்தவரை ரசாயன கிளீனர்களுக்கு பதிலாக பாத்ரூமை சுத்தம் செய்ய வினிகர், பேக்கிங் சோடா போன்றவற்றை பயன்படுத்தலாம்.
