4 நாட்களாக மாயமான தவெக நிர்வாகி…. கல்குவாரியில் சடலமாக மீட்பு… அந்த 1-ஆம் தேதி இரவில் நடந்தது இதுதான்… வெளியான திடுக்கிடும் தகவல்…!

By Nanthini on ஆனி 6, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாயமான தமிழக வெற்றிக் கழக (தவெக) ஒன்றிய நிர்வாகி, நான்கு நாட்களுக்குப் பிறகு தனியார் கல்குவாரி குட்டையில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

மரணமடைந்த நபர் கடையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தவெக ஆலங்குளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒன்றிய பொறுப்பாளராக இருந்து வந்ததுடன், கடையத்தில் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வந்தார். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இவரும், இவருடைய மனைவி தெரசாவும் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

   

சக்திவேலுக்கு கடுமையான கடன் பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி அவர் வட்டி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்துள்ளார். கடந்த 1-ஆம் தேதி தனது மனைவியிடம் சம்பளப் பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த சக்திவேல் மனைவியைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த தெரசா, தனது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்குச் செல்வதாகக் கூறிவிட்டு பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். அவரைத் பின்தொடர்ந்து பைக்கில் சென்ற சக்திவேல், அதன்பின் வீடு திரும்பவில்லை.

 

அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று கடையம் அருகே தெற்கு மடத்தூர் பகுதியில் உள்ள மூடப்பட்ட தனியார் குவாரி தண்ணீரில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்ட போலீசார், அது மாயமான சக்திவேல் தான் என்பதை உறுதிப்படுத்தினர். உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், கடன் பிரச்சினையால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது குவாரியில் தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மைத் தாத்பரியம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.