“எங்க பொண்ணு உயிரோட தான் இருக்கா”… 3 நாட்களில் வரப்போகும் நல்ல செய்தி?…. ஆலம்பூண்டி கிராமத்தையே உலுக்கிய 7 வயது சிறுமியின் மாயன்…. தாய் அளித்த பகீர் வாக்குமூலம்….!

By Nanthini on ஐப்பசி 29, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் இளைய மகள் ஹேமலதா, இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த அக்டோபர் 11-ம் தேதி தனது பிறந்தநாளை உறவினர்களுடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு தாயுடன் வீட்டின் உள்ளே தூங்கச் சென்றுள்ளார். ஆனால், மறுநாள் காலை பார்த்தபோது சிறுமி மாயமாகியிருந்தது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுற்றியுள்ள வீடுகளிலும் ஊர் முழுவதிலும் தேடியும் சிறுமி கிடைக்காததால், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

   

சிறுமியின் காணாமல் போன விவகாரம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டக் காவல்துறை உயர் எச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கியது. நான்கு டி.எஸ்.பிக்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்ட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. டிரோன்கள், மோப்ப நாய்கள் மற்றும் மீனவர்களின் உதவியுடன் கிராமத்தைச் சுற்றியுள்ள கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும், கிராம வீடுகளிலும் முழுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களிடமும் காவல்துறையினர் விரிவான விசாரணையை மேற்கொண்டனர்.

தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத சூழலில், வழக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறி போராட்டங்கள் வலுத்தன. இதையடுத்து, வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி தமிழகக் காவல்துறை உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.ஜவஹர் தலைமையிலான குழுவினர் ஆலம்பூண்டி கிராமத்திற்கு நேரில் சென்று, பெற்றோர் உட்பட ஏற்கனவே விசாரிக்கப்பட்ட நபர்களிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்தினர். சந்தேகத்திற்குரிய நபர்களைச் சம்பவ இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்தபோதிலும், வழக்கிற்குத் தேவையான முக்கியத் தடயங்கள் உடனடியாகச் சிக்கவில்லை.

   

இந்தச் சம்பவம் தமிழக அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பவே, வழக்கு தமிழக அளவில் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றது. இதனால் ஏற்பட்ட தீவிர அழுத்தத்தின் காரணமாக, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த கூடுதல் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளும் விசாரணைக் களத்தில் களமிறக்கப்பட்டு, தேடுதல் பணி மேலும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

 

மகள் காணாமல் போய் நாட்கள் பல கடந்த நிலையிலும், பெற்றோர் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கோயிலில் பூ போட்டுப் பார்த்ததில் நல்ல சகுனம் வந்திருப்பதாகவும், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நல்ல செய்தி கிடைக்கும் என்று காவல்துறையினர் தங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளதாகவும் சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார். சி.பி.சி.ஐ.டி-யின் இந்த தீவிர விசாரணையின் மூலம் சிறுமி ஹேமலதா விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் முழு கிராமமும் உறைந்து போய் உள்ளது.