“நான் அவன் இல்லை” ரூ.258 கோடி சர்வதேச போதைப்பொருள் வழக்கில் திடீர் ட்விஸ்ட்… அமைச்சர் உறவினர் ஜான் பிரிட்டோ கமிஷனர் ஆபீசில் அதிரடிப் புகார்..!!

By Soundarya on ஆனி 9, 2026

Spread the love

முன்னாள் அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரரும், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினருமான ஜான் பிரிட்டோ, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் நபரும் தானும் வேறு வேறு என்று திட்டவட்டமாக விளக்கியுள்ளார். அண்மையில் சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறையால் கண்டறியப்பட்ட ரூ.258 கோடி சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கின் மூளையாகச் செயல்பட்ட ‘ஜான் பிரிட்டோ’ என்ற பெயரைக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் அரசியல் உள்நோக்கத்துடன் வதந்திகள் பரப்பப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பெயரளவில் உள்ள ஒற்றுமையை வைத்துக்கொண்டு, தனது குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கச் சிலர் திட்டமிட்டு இவ்வாறு செய்வதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கேரளாவில் தன் மீது லாட்டரி தொழில் தொடர்பான ஒரு வழக்கு மட்டுமே பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாகவும், அதைத் தவிர வேறு எந்தவொரு சட்டவிரோதச் செயல்களிலோ அல்லது போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களிலோ தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் ஜான் பிரிட்டோ குறிப்பிட்டுள்ளார். தவறான செய்திகளைப் பரப்பி வரும் நபர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.