பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

By Nanthini on ஆனி 23, 2026

Spread the love

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. இதனால், அரசு நிர்வாகம் தொய்வில்லாமல் நடக்க முதல்வர் விஜய் ஒரு அதிரடியான மாற்று ஏற்பாட்டைச் செய்ய ஆலோசித்து வருவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றது முதலே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம், தலைமைச் செயலக ஊழியர்களின் வருகைப் பதிவேடு சீர்திருத்தம் எனப் பல அதிரடிகளை முதல்வர் விஜய் மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில், மக்கள் தங்களின் குறைகளை நேரடியாகத் தெரிவிக்க ஏதுவாக, முதல்வர் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களை அரசு பொதுவெளியில் வெளியிட்டது. இதில் முதல்வருக்கு மின்னஞ்சல் முகவரி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், மற்ற அமைச்சர்களுக்குப் போன் நம்பர்களும் இணைக்கப்பட்டிருந்தன.

   

பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது அமைச்சர்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. தங்களுக்குத் தேவையான உதவிகள், புகார்கள் எனப் பொதுமக்களிடம் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான அழைப்புகள் இந்த எண்களுக்கு வந்தவண்ணம் உள்ளன. இந்த எண்களை அமைச்சகத்தின் உயரதிகாரிகள் கையாண்டு, முக்கியமான பிரச்சினைகளை அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தாலும், தொடர் அழைப்புகளால் எண்கள் எப்போதும் ‘பிஸி’யாகவே இருக்கின்றன.

   

இதன் காரணமாக, அவசரக் காலங்களில் அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் தங்களுக்குள் முக்கியத் திட்டங்கள் குறித்தோ அல்லது நிர்வாக முடிவுகள் குறித்தோ போனில் தொடர்பு கொண்டு பேச முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரசு எண்கள் தொடர்ந்து பொதுமக்களின் அழைப்புகளால் பிஸியாக இருப்பதால், துறைகளுக்கு இடையேயான அவசரத் தொடர்புகள் துண்டிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

 

இந்த நிர்வாகச் சிக்கலைத் தவிர்க்க, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்குள் எந்தவித இடையூறும் இன்றிப் பேசிக் கொள்ளும் வகையில் தனியாக ஒரு சிஸ்டத்தைக் கொண்டு வர முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து புதிய எண்களைப் பெற்று, அதை சி.யு.ஜி முறையில் இணைக்கத் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் புதிய எண்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும் என்றும், அவை எக்காரணம் கொண்டும் பொதுவெளியில் வெளியிடப்படாது என்றும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் அமைச்சர்களும் அதிகாரிகளும் தங்களுக்குள் தங்கு தடையின்றிப் பேசி நிர்வாகத்தை வேகப்படுத்த முடியும். அதேநேரம், ஏற்கனவே வெளியிடப்பட்ட எண்கள் பொதுமக்களின் குறைதீர்க்கும் பயன்பாட்டிற்காகத் தொடர்ந்து செயல்பாட்டிலேயே இருக்கும் எனத் தெரிகிறது.