உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோடை வெயில் 46 டிகிரி செல்சியஸைத் தாண்டி சதமடித்து வரும் நிலையில், அம்மாநில பாஜக அரசுத் துறை அமைச்சர் சஞ்சய் சர்மா ஆய்வுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர், கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியாமல் குளிரூட்டியை (AC) பயன்படுத்தியுள்ளார். இதைக் கண்டு கோபமடைந்த அமைச்சர், அந்த காவலரை நோக்கி, “ஏசி இல்லாமல் உங்களால் இருக்க முடியாதா?” என்று அனைவரின் முன்னிலையிலும் கடுமையாகச் சாடினார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அமைச்சரின் செயலுக்குப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. “46 டிகிரி சுட்டெரிக்கும் வெயிலில் சாதாரண மனிதர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல், அமைச்சர் இப்படிப் பேசியது மிகவும் சுயநலமானது” என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மறுபுறம், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சொகுசான ஏசி வாகனங்களிலும், குளிரூட்டப்பட்ட அறைகளிலும் பயணிக்கும் போது, நாட்டின் பாதுகாப்பிற்காக வெயிலில் பாடுபடும் காவலர்களுக்கு இந்த அடிப்படை வசதி கூட மறுக்கப்படுவதா என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தற்போதைய சூழலில் பெரும் அரசியல் மற்றும் சமூக விவாதமாக மாறியுள்ளது.
