மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் கட்சி என 5 முனைப் போட்டி நிலவும் இத்தேர்தலில், அரசியல் தலைவர்களின் பிரசாரங்கள் பரஸ்பர விமர்சனங்களால் அனல் பறக்கின்றன. சமீபத்தில் தாராபுரத்தில் பிரசாரம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜயைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தாராபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் அமைச்சர் ரமேஷ் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்தார். “பிரசாரத்திற்கு வரும் தலைவர்கள் தங்கள் ஆட்சியின் சாதனைகளைப் பற்றிப் பேச வேண்டும். ஆனால் திமுக அரசு எந்தச் சாதனையும் செய்யாததால் உதயநிதியால் எதையும் பேச முடியவில்லை. அவர்கள் செய்த சாதனைகள் இரண்டே இரண்டுதான்; ஒன்று, டாஸ்மாக் வருவாயை 50,000 கோடி ரூபாயாக உயர்த்தியது. மற்றொன்று, சொந்தக் கட்சிக்குள்ளேயே உலகளவில் கஞ்சா விற்கும் வியாபாரிகளை வைத்திருந்ததுதான்” என்று ரமேஷ் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர்களின் பேச்சில் ஆபாசம் நிறைந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். “சாதனைகளைச் சொல்ல முடியாததால் உதயநிதி உடனடியாக ஆபாசப் பேச்சில் இறங்கிவிட்டார். சட்டமன்றம், பேட்டிகள், கட்சி கூட்டங்கள், பிரசாரம் என எங்கு பார்த்தாலும் ஆபாசப் பேச்சுதான் நிலவுகிறது. எங்கள் தலைவர் விஜய்யை ‘டிசன்ட் பாலிடிக்ஸ்’ மற்றும் நாகரிகமான விமர்சனங்களைத்தான் எங்களுக்குக் கற்றுக்கொடுத்து வளர்த்துள்ளார். உதயநிதியை அவரது தந்தை ஒழுக்கமாக வளர்த்திருந்தால், போகிற இடமெல்லாம் இப்படிப் பேசுவாரா? கடந்த 5 ஆண்டுகளில் சொந்தக் கட்சி அமைச்சர்களையும் ஸ்டாலின் ஒழுங்காக வழிகாட்டவில்லை. அதனால்தான் கொளத்தூரில் ஸ்டாலின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக மாறிவிட்டார்” என்று கடுமையாகச் சாடினார்.
மேலும் சட்டமன்ற நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட்டுப் பேசிய ரமேஷ், “இளம் பெரியார், இளம் சூரியன் என்றெல்லாம் புகழப்படும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சட்டமன்றத்தில் ஏன் ஒரு மணி நேரத்திற்கு மேல் அமர்வதில்லை என்று கேட்கப்பட்டபோது, அவர் பாத்ரூம் சென்றதாகக் கூறி அனைவரும் சிரித்தனர். ஆயிரம் இருந்தாலும் அவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவர்; அவர் பாத்ரூமில் அமர்ந்துள்ளார் என்று இனிமேல் யாரும் திரும்பித் திரும்பிச் சொல்லக் கூடாது” என்று நக்கலாகக் கூறித் தனது பேச்சை முடித்தார்.
