ஸ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பு….. 50 கோடி மதிப்பிலான பெருமாள் நிலத்தில் திமுக ஆபீஸ்?…. ஆதாரம் வெளியிட்ட அமைச்சர்….. பதறும் அரசியல் வட்டாரம்….!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

உலகப் புகழ்பெற்ற வைணவத் திருத்தலமான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு திமுக அலுவலகம் செயல்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். புரட்டாசி சனிக்கிழமையான இன்று ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திருத்தலத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கும் வகையில் துறை ரீதியான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் அளித்த விவரங்களின்படி, 1866-ஆம் ஆண்டைய சொத்துரிமை பத்திர எண் 1027-ன் கீழ் சுமார் 329 ஏக்கர் நிலங்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமானது என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நில உரிமையை 1910-ஆம் ஆண்டின் இனாம் கமிஷனர் அறிக்கையும், 1930-ஆம் ஆண்டின் ‘ஏ’ பதிவேடும் (A-Register) தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், திமுக பகுதிச் செயலாளர் ஒருவர் ‘ஏ’ பதிவேட்டில் உள்ள அதே சர்வே எண்ணைக் கொண்ட கோயில் நிலத்தை சட்டவிரோதமாகப் பெயர் மாற்றம் செய்து, அதில் திமுக அலுவலகம் கட்டி நடத்தி வருவதாகப் பல புகார்கள் வந்துள்ளன.

   

மேலும், 2020-ஆம் ஆண்டிலேயே கோயில் நிர்வாகம் சார்பில் பத்திரப்பதிவுத் துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டு, பத்திரம் 1027-க்கு உட்பட்ட கோயில் நிலங்களை விற்பனையோ அல்லது மறுபதிவோ செய்யக் கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தச் சொத்து, வருவாய்த் துறை, காவல்துறை, அறநிலையத் துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை ஆகியவற்றின் கண்களில் படாமல், போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.

   

அரசியல் செல்வாக்கு மற்றும் உயர்மட்ட நபர்களின் தலையீடு இல்லாமல் இத்தகைய பிரம்மாண்ட நில மோசடியைச் சாதாரண நபர்களால் செய்ய முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர், “சிவன் சொத்து குலநாசம்” எனப் பேசியவர்கள் பெருமாள் சொத்தை ஆக்கிரமிக்கத் துணை போயிருப்பதாகச் சாடினார். இந்த மோசடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அல்லது அரசியல் புள்ளிகள் என யாரெல்லாம் பின்னணியில் செயல்பட்டுள்ளனரோ, அவர்கள் அனைவரும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என அவர் உறுதியளித்தார்.