மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மதுரை மாவட்ட பொறுப்பு அமைச்சரான சி.டி.ஆர். நிர்மல்குமார், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மதுரை மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டத்தை வெறும் 3 மாதங்களில் நிறைவேற்றியுள்ளதாகப் பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் தற்போதைய உட்கட்சி மாற்றங்கள் மற்றும் நிர்வாக ரீதியான முடிவுகளை மிகக் கடுமையான சொற்களால் விமர்சித்துப் பேசினார்.
திமுக அறிவாலயத்தில் 70 வயதைக் கடந்த மூத்த மாவட்ட செயலாளர்களைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, இளைஞர்களுக்குப் பொறுப்புகளை வழங்கத் திட்டமிட்டு வருவதாகக் குறிப்பிட்ட நிர்மல்குமார், மக்கள் ஏன் திமுகவைப் புறக்கணித்தார்கள் என்பதை அக்கட்சித் தலைமை இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்று சாடினார். மூத்த நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய இளைஞர்களை நியமிப்பதால் மட்டுமே மீண்டும் மக்களின் நம்பிக்கையையும் வாக்குகளையும் பெற்றுவிட முடியாது என்றும், மக்கள் திமுகவைத் தொடர்ந்து நிராகரித்து வருவதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை அறிவாலயம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அவர் தனது உரையில், “திமுக என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் சொத்தாக மாற்றப்பட்டுவிட்டது. கோபாலபுரம் குடும்பத்தில் தொடங்கி, இன்று ஸ்டாலின் மற்றும் உதயநிதி எனத் தலைமுறை தலைமுறையாகக் குடும்ப ஆதிக்கமே தொடர்கிறது. மாப்பிள்ளை, மகன் மற்றும் அவர்களின் நண்பர்கள் அடங்கிய 10 முதல் 20 பேர் கொண்ட குழுவே தமிழகத்தை ஆட்சி செய்ய நினைக்கிறது” எனக் குற்றம்சாட்டினார். மேலும், வழக்கு பதிவானதும் உதயநிதியின் நண்பர் ரத்தீஷ் துபாய்க்குத் தப்பி ஓடிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மக்களுக்கு என்ன தேவை என்ற அரசியல் அறிவோ அல்லது கட்சி குறித்தப் புரிதலோ இல்லாத நபர்களே திமுக ஆட்சியை வழிநடத்தியதாகத் தெரிவித்தார்.
இறுதியாக, “அண்ணா எத்தனையோ சிறமங்களுக்கும் தியாகங்களுக்கும் இடையே உருவாக்கிய ஒரு இயக்கத்தை இன்று ஒரே குடும்பம் கொள்ளையடித்துத் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. திமுகவில் முதலில் ஜனநாயகத்தைக் கொண்டுவர வேண்டும். ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட கோபாலபுரம் குடும்பத்தினர் முற்றிலும் கட்சியிலிருந்து வெளியேறினால் மட்டுமே திமுக மீண்டும் மக்கள் பக்கம் திரும்பும்; இல்லையெனில் மக்கள் அவர்களை என்றென்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
