அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரான சி.டி. நிர்மல்குமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வாக்கு எண்ணிக்கை முடிந்த நாளில் இருந்து கடந்த 50 நாட்களாக எடப்பாடி பழனிசாமி, அவரது மகன் மற்றும் திமுக தலைவர்களான மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகிய நால்வரும் மேற்கொண்ட ரகசிய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தத் தோல்வியின் காரணமாகவே, இத்தனை நாட்களாக வெளியில் வராமல் இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போதுதான் செய்தியாளர்களைச் சந்திக்கத் துணிந்துள்ளார் என்றும் அவர் சாடினார்.
மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வழிநடத்திய அதிமுக, எப்போதும் தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை நோக்கியோ பயணித்தது இல்லை என்று நிர்மல்குமார் சுட்டிக்காட்டினார். ஆனால், எப்படியாவது மீண்டும் முதலமைச்சராக வேண்டும், தன் சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் சுயநலப் போக்கே கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றார். என்றைக்கு எடப்பாடி தனது குடும்பத்தையும் மகனையும் காப்பாற்ற கட்சியைப் பயன்படுத்தத் தொடங்கினாரோ, அன்றைக்கே அதிமுக அழியத் தொடங்கிவிட்டது என்றும், கட்சியின் இந்த அதல பாதாள நிலைக்கு அவரே முழுப் பொறுப்பு என்றும் குற்றம்சாட்டினார்.
எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட ஒரு மிகப்பெரிய பேரியக்கத்தை மூட்டை கட்டிக் கொண்டு போய் சேலத்தில் முடக்கி வைத்துள்ளதாக எடப்பாடி மீது சாடிய அமைச்சர், அவர் இனியாவது தனது தவறுகளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ஒரு காலத்தில் ஜானகி அம்மாள் அதிமுகவை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றது போல, தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை தகுதியான யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு விலகுவதே அந்த கட்சிக்கு நல்லது என்றும் நிர்மல்குமார் காட்டமாகத் தெரிவித்தார்.
