24% கமிஷன்… ஓடிப்போன 25 நிறுவனங்கள்.. ரூ.3.3 லட்சம் கோடி யாரால் பறிபோனது… திமுகவை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீர்த்தனா..!!

By Soundarya on ஆனி 22, 2026

Spread the love

தமிழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் 23 முதல் 24 சதவீதம் வரை கமிஷன் வாங்கிய பின்னரே அடுத்த வேலைகள் நகர்ந்ததாக அமைச்சர் கீர்த்தனா சாடியுள்ளார். தற்போதைய அரசு ‘ஜீரோ கரப்ஷன்’ மாடலைக் கொண்டு வந்துள்ள நிலையில், கடந்த ஆட்சியாளர்கள் தங்களைக் கேள்வி கேட்பதா என்று அவர் மார்தட்டியுள்ளார். மேலும், 50 ஆண்டுகால சாம்ராஜ்ஜியத்தையும், டெண்டர் மாபியாவையும் வெறும் 30 நாட்களில் தங்கள் அரசு அழித்துக் காட்டியுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தங்கள் ஆட்சியை ‘ரீல்ஸ் ஆட்சி’ என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர், தான் வெளியிட்ட முதலீட்டு வீடியோவைச் சிலர் கேலி செய்ததைச் சுட்டிக்காட்டினார். மக்கள் வரிப்பணத்தில் குடும்பம் குடும்பமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்களுக்குத் தங்களைக் விமர்சிக்கத் தகுதியில்லை என்று கூறிய அவர், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் கமிஷன் கேட்கப்பட்டதால் தமிழகத்திற்கு வரவிருந்த பெரும் முதலீடுகள் கைவிட்டுப் போனதாகக் குற்றம் சாட்டினார்.

   

குறிப்பாக, கடந்த ஆட்சியில் நிலவிய கமிஷன் கலாச்சாரத்தால் தொழில் தொடங்க வந்த 25 நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாக அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக, தமிழகத்திற்கு வர வேண்டிய சுமார் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடும், 2 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகளும் பறிபோய்விட்டதாகக் கூறிய அமைச்சர் கீர்த்தனா, இந்த இழப்புகளுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள் என்றும் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.