தமிழக சட்டசபையில் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் என்பதால், இக்கூட்டத்தொடர் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ‘அண்ணன் சீர் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி, தயாரித்து கொண்டுவரப்பட்ட அறிக்கையை பார்த்து வாசிப்பதிலேயே கடும் சிரமத்திற்கு ஆளானார்.
சட்டப்பேரவையில் அமைச்சரின் உரை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அடிப்படைத் தமிழ் வார்த்தைகளைக் கூடத் தவறாக உச்சரித்து அவர் திணறியது அவையில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ‘தளபதியாரை’ என்பதை ‘தளபிதியார்’ என்றும், ‘பேரவை தலைவர்’ என்பதை ‘பேரவர் தலைவர்’ என்றும் வாசித்தவர், தொடர்ந்து ‘வடிவமைக்கப்பட்ட’, ‘இல்லங்கள்’, ‘அருமை கருதி’ போன்ற எளிமையான சொற்களை தவறாகவே உச்சரித்தார். பத்து இடங்களுக்கும் மேலாக நிகழ்ந்த இந்தத் தடுமாற்றங்களைக் கண்டு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகரே குறுக்கிட்டு சரியான வார்த்தைகளை எடுத்துக்கூறி திருத்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் விஜய்யும் அமைச்சரின் இந்த திக்கித் திணறிய வாசிப்பைக் கண்டு தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு துறை சார்ந்த கொள்கை முடிவுகளையும், மக்களுக்கான நலத்திட்டங்களையும் சட்டமன்றத்தில் பதிவு செய்யும் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் ஒருவர், எழுதி வைத்த உரையைக்கூடப் பிழையின்றி வாசிக்க முடியாமல் திணறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, தற்போது பெரும் ட்ரோல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
அரசுத் திட்டங்களின் பயன்பாடும், நிதி ஒதுக்கீடும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அதை அவையில் முன்வைக்கும் அமைச்சர்களின் ஆளுமையும் தெளிவும் முக்கியமானது. நிர்வாக ரீதியிலான திட்டங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அமைச்சர்களின் இத்தகைய செயல்பாடுகள் புதிய அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் திறமைக்கே ஒரு பின்னடைவாக அமைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
