இனி கவலையே வேண்டாம்… ஏமாந்தா பணம் உங்களை தேடி வரும்… தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் ஆதவ் அர்ஜுனா…!

By SATHISH R on ஆடி 2, 2026

Spread the love

கடந்த ஆட்சிக்காலங்களில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் பெறுவதற்காகப் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள், தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தால் அவர்கள் இழந்த பணத்தை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழக அரசின் நிர்வாகம் தற்பொழுது மிக நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்துச் சட்ட பாதுகாப்புகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

முந்தைய ஆட்சிகளில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் திட்டமிடப்பட்ட விதிமீறல்களும், மையப்படுத்தப்பட்ட ஊழல்களும் அரங்கேறியுள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களது குடும்ப உறவுகள் மற்றும் நெருக்கமானவர்கள் ஒப்பந்தம் தருவதாகக் கூறி பலரிடம் பெருமளவில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, வேலைகளையும் ஒதுக்காமல் ஏமாற்றியுள்ளனர். சென்னையில் நடைபெற்ற ஒப்பந்ததாரர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், கடந்த காலங்களில் டெண்டர் எடுப்பதற்கு முன்பே ‘முதலமைச்சர் நிதி’, ‘அமைச்சர் நிதி’, ‘கட்சி நிதி’ என்ற பெயர்களில் திட்ட மதிப்பில் சுமார் 25 சதவீதம் வரை கமிஷன் தொகையாகப் பெறப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளதாகச் சாடியுள்ளார்.

   

இதுபோன்ற முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுப் பணத்தை இழந்தவர்கள், தங்களின் புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடமோ அல்லது அமைச்சரிடமோ நேரடியாகத் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதற்கென பிரத்யேகமாக minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு புகார் அளிப்பவர்களின் விவரங்கள் முற்றிலும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாயும் என்றும் அமைச்சர் தனது செய்திக் குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

   

இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் இதுபோன்ற லஞ்ச முறைகேடுகளுக்கு இடமிருக்காது என்றும், அனைத்து ஒப்பந்தங்களும் முற்றிலும் ஆன்லைன் வாயிலாக, வெளிப்படையான முறையில் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசில் அமைச்சர்களோ, அதிகாரிகளோ அல்லது கட்சி நிர்வாகிகளோ ஒப்பந்ததாரர்களிடம் இருந்து எந்தவொரு கமிஷனோ, லஞ்சமோ கோர மாட்டார்கள் என்றும், நேர்மையான நிர்வாகம் தொடரும் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.