ஸ்டாலின் சார்… உங்க பேரப் பிள்ளைகளை எப்போதாவது அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கீங்களா?… திமுகவை அதிரவைத்த அமைச்சர் ஆதவ்… அரசியலில் பரபரப்பு…!

By Swetha on ஐப்பசி 27, 2026

Spread the love

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் ஆதவ், யாரையும் பழிவாங்கும் நோக்கம் தங்களுக்குக் கிடையாது என்றும், 1977-க்குப் பிறகு மக்கள் தங்களுக்கு மிகப்பெரிய தேர்தல் வெற்றியை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதே தங்களின் முக்கியப் பிரசார நோக்கம் என்றும், தவறு செய்தவர்கள் மீது மக்கள் முன்னிலையில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

சட்டப்பேரவையில் ஊழல் குறித்துப் பேசிய போது, உதயநிதி ஸ்டாலின் கேலியாகவும் கிண்டலாகவும் “ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள்” என்று கூறியதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். தான் ஒரு அரசுப் பள்ளியில் படித்து வந்தவன் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மழையின்போது அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததால் மரத்தடியில் படித்து வளர்ந்த தனக்கு அரசுப் பள்ளிகளின் உண்மையான நிலை தெரியும் என்றார். ஆனால், ஸ்டாலின் தனது மகன்களையோ அல்லது பேரப்பிள்ளைகளையோ எப்போதாவது அரசுப் பள்ளிக்கு அனுப்பியதுண்டா என்று கேள்வி எழுப்பினார்.

   

தொடர்ந்து திமுக ஆட்சியை விமர்சித்த அமைச்சர் ஆதவ், திமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பள்ளிகளுக்குச் சான்றிதழ் வழங்கும் விவகாரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும், வளமான துறைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அதிலிருந்து பணம் எடுப்பதே முந்தைய ஆட்சியாளர்களின் முக்கிய நோக்கமாகச் செயல்பட்டது என்றும் அவர் தன் பேட்டியில் கடுமையாக விமர்சித்தார்.