முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான எ.வ. வேலு, சட்டப்பேரவையின் முன் அனுமதி பெறாமல் எதிர்கால பட்ஜெட்டிலிருந்து ரூ.2,000 கோடி மதிப்பிலான பணிகளுக்கு முன்கூட்டியே நிதி பொறுப்பை உருவாக்கியதாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். கடந்த 2021-26 ஆட்சிக் காலத்தில், 2026-27 நிதியாண்டிற்கான CRIDP திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு அரசாணை மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அவசர அவசரமாக பணி ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டமன்றத்தில் 2026-27ம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கைகள் வாக்களிக்கப்படாத நிலையிலும், நிதி ஒதுக்கீடு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படாத சூழலிலும், இத்தகைய முன்கூட்டிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது பேரவை நடைமுறைகளுக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் முற்றிலும் எதிரானது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மீண்டும் ஆட்சிக்கே வந்துவிடலாம் என்ற எண்ணத்தில், பேரவையை மதிக்காமல் எதிர்கால பட்ஜெட் நிதியை முன்கூட்டியே பயன்படுத்தியது நிதி நிர்வாகத்தில் செய்யப்பட்ட பெரும் விதிமீறல் என அவர் கடுமையாகச் சாடினார்.
அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 203-ன் படி, மாநில செலவினங்களை பரிசீலித்து மானியங்களை ஏற்கவோ, மறுக்கவோ அல்லது குறைக்கவோ சட்டப்பேரவைக்கே முழு அதிகாரம் உள்ளது. ஆனால், முன் அனுமதியின்றி ஒப்பந்தப் பொறுப்பை முன்கூட்டியே உருவாக்கியதன் மூலம் சட்டமன்றத்தின் அந்த பிரத்தியேக அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் செய்யப்படும் நிதி ஒதுக்கீடு இந்த அங்கீகாரமற்ற செயலையும் விதிமீறலையும் சட்டப்பூர்வமாக்கிவிடாது என்றும் அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
சட்டப்பேரவையின் நிதி மேலாதிக்கத்தையும், அதன் கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீதான இந்த குற்றச்சாட்டுகளை, சட்டப்பேரவை விதி 225-ன் கீழ் உரிமைக்குழுவின் ஆய்வுக்கும் விசாரணைக்கும் அனுப்ப வேண்டும் என்று சபாநாயகரிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
