ஒரே ஒரு பீடி தருமாறு கேட்டுத் தொல்லை…. மறுத்த வடமாநிலத் தொழிலாளி சென்னையில் கொடூரமாக அடித்துக் கொலை… பரபரப்பு சம்பவம்….!

By Nanthini on புரட்டாதி 7, 2026

Spread the love

சென்னை நொளம்பூர் கஜலட்சுமி நகரில் தங்கி, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அபிஜித் (54) என்ற கட்டிடத் தொழிலாளி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று வேலை முடிந்து குடியிருப்பின் நுழைவு வாயிலில் நின்றபடி அவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மதுபோதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரிடம் ஓசியில் பீடி கேட்டுத் தொல்லை கொடுத்துள்ளது. அதற்கு அபிஜித் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அக்கும்பல், அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது.

உருட்டுக் கட்டை மற்றும் இரும்புக் கம்பியால் அந்த கும்பல் தாக்கியதில், அபிஜித் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மற்றும் சக தொழிலாளர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அபிஜித் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த நொளம்பூர் காவல் துறையினர் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

இக்கொலை வழக்கு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (18), வசீகரன் (20), சபரி (19) மற்றும் அஜய் (18) ஆகிய 4 வாலிபர்களைக் கைது செய்தனர். ஓசியில் பீடி தராத காரணத்திற்காக மதுபோதையில் வடமாநிலத் தொழிலாளியை அடித்துக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.