“டிரம்ப் போட்ட ஒரே ஒரு போஸ்ட்… நடுங்கிப்போய் போரை நிறுத்திய ஈரான்”… உலக நாடுகளை அதிரவைத்த அந்த ‘முக்கிய அறிக்கை’…!

By Nanthini on ஆனி 9, 2026

Spread the love

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போர்ப் பதற்றம் தற்போது ஒரு முக்கிய திருப்பத்தை சந்தித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி இஸ்ரேல் அண்மையில் குண்டுவீச்சு நடத்தியது. ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என இஸ்ரேல் விளக்கமளித்த நிலையில், இதற்குப் பதிலடியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது ட்ரோன்களை இஸ்ரேல் நோக்கி ஏவியது. இன்று முழுக்க இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் ஈடுபட்டதால், மத்தியக் கிழக்கில் ஒரு முழு அளவிலான போர் வெடிக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவி வந்தது.

   

இந்த இக்கட்டான சூழலில், ஈரான் ராணுவ தலைமையகமான காதம் அல்-அன்பியா சற்று நேரத்திற்கு முன்பு ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளது. லெபனான் மற்றும் பெய்ரூட்டில் இஸ்ரேல் செய்த அத்துமீறல்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அந்த தலைமையகம், தங்களின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலும் அதன் ஆதரவு நாடுகளும் இந்தத் தாக்குதலில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மீண்டும் இஸ்ரேல் ஆத்திரமூட்டும் செயல்களிலோ அல்லது லெபனான் மீதான தாக்குதல்களிலோ ஈடுபட்டால், இதைவிடப் பல மடங்கு வலிமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

   

மத்தியக் கிழக்கைப் உலுக்கிய இந்த மோதலைத் தடுத்து நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் தீவிரமாகத் தலையிட்டு இரு தரப்பிற்கும் இடையே சமரசம் பேசியுள்ளனர். குறிப்பாக, ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவிற்குப் பின்னரே ஈரான் இந்த போர் நிறுத்த முடிவை அறிவித்துள்ளது. அந்தப் பதிவில், “ஈரானும் இஸ்ரேலும் உடனடி போர் நிறுத்தத்தை விரும்புகின்றன; இது தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் மிக வேகமாக முன்னேறி வருகின்றன” என்று குறிப்பிட்ட ட்ரம்ப், இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளும் ஹார்முஸ் முற்றுகையும் முழுமையாக அமலில் இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

சுவாரசியமாக, இந்த அதிகாரப்பூர்வ போர் நிறுத்த அறிவிப்பு வெளியாவதற்குச் சற்று முன்னதாக, ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ ஊடகமான ‘தஸ்னிம்’ முற்றிலும் மாறுபட்ட ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் ஒரு ஈரான் ராணுவ அதிகாரி, தாங்கள் நீண்ட காலப் போருக்குத் தயாராக இருப்பதாகவும், அமெரிக்காவின் நலன்கள் மீது தாக்குதல் நடத்தத் தயங்க மாட்டோம் என்றும் எச்சரித்திருந்தார். ஆனால், அமெரிக்க அதிபரின் தலையீடும் சமூக ஊடகப் பதிவும் வெளியான சில மணி நேரங்களிலேயே, அந்த எச்சரிக்கையையும் மீறி ஈரான் ராணுவம் அதிகாரப்பூர்வமாகப் போரை நிறுத்துவதாக அறிவித்தது உலக அரங்கில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.