செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப (IT) துறை மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும், அதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் அமேசான், ஆரக்கிள் போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்து வருகின்றன. இதற்கான செலவுகளை ஈடுகட்டும் விதமாகவும், நிறுவனத்தின் செயல்பாடுகளை சீரமைக்கவும் எண்ட்ரி லெவல் மற்றும் மிட் லெவல் பணியாளர்களை இலக்காகக் கொண்டு தொடர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அவை ஈடுபட்டு வருகின்றன.
அந்த வரிசையில், உலகின் முன்னணி தொழில்நுடப் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் (Microsoft) சுமார் 60,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. ஏஐ பிரிவில் அதிக முதலீடுகளைச் செய்வதற்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் பணியாற்றும் வைஸ் பிரசிடண்ட் (Vice President) நிலை மற்றும் அதற்கு கீழ் நிலைகளில் உள்ள ஊழியர்களுக்குச் சிறப்பான ‘விருப்ப ஓய்வு திட்டத்தை’ (Voluntary Retirement Scheme) நிறுவனம் அறிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவரும் தலைமை மனிதவள அதிகாரியுமான ஏமி கோல்மேன் இது குறித்து ஊழியர்களுக்கு அனுப்பிய மெமோவில், “தொழில்நுட்ப மாற்றங்களை நாம் அணுகும் விதத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான முன்னேற்றத்தையே இந்த விருப்ப ஓய்வு திட்டம் பிரதிபலிக்கிறது. ஊழியர்கள் தங்களின் அடுத்தகட்ட வாழ்க்கைப் பயணத்தைத் தாங்களே தீர்மானிப்பதற்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக இருக்கும் டேட்டா செண்டர்கள், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்தத் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சுமார் 2,23,000 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த எண்ணிக்கை நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் கிட்டத்தட்ட கால் பங்காகும் (25%). நடப்பு ஆண்டில் மைக்ரோசாஃப்ட் அறிவிக்கும் இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 7 சதவீத ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு பிளான் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் டேட்டா செண்டர் விரிவாக்கத்திற்காக இந்த மிகப்பெரிய ஆட்குறைப்பை மைக்ரோசாஃப்ட் கையில் எடுத்துள்ளது.
