இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் அறிமுகமாகி 1935 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவேளைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோவாக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கி நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வளம் வந்த எம்ஜிஆர் அரசியலிலும் தன்னை தடம் பதித்து கொண்டார். தமிழ் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் தான் எம்ஜிஆர். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் கண்டும் காணாமலும் பலருக்கும் எம்ஜிஆர் பலவிதமான உதவிகளை செய்துள்ளார். அப்படி ஒரு நாள் எம்ஜிஆர் உடன் ஆரம்ப காலகட்டத்தில் உடன்நடித்த ஒரு துணை நடிகர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழ் வழங்க எம்ஜிஆர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் எம்ஜிஆர் அழைப்பிதழை பெற்றுக் கொள்ளாமல் அந்த நபரை பல மணி நேரம் வீட்டிலேயே அமர வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் அழைப்பிதழ் வழங்க வந்த அந்த நடிகருக்கு ஒரே அவமானம் ஆகிவிட்டது. எம்ஜிஆர் தன்னை அவமானப்படுத்துகிறார் என்ற சங்கடத்துடன் அங்கிருந்து கிளம்ப தயாரானார். அப்போது படியிலிருந்து இறங்கி வந்த எம் ஜி ஆர் அந்த நபரை அழைத்து நீங்கள் ஒன்றும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம், நண்பரே நீங்கள் உங்கள் மகளின் திருமணத்திற்காக அழைப்புகள் கொண்டு வந்திருக்கிறீர்கள், ஆனால் நானும் பிள்ளை குட்டி இல்லாதவன். என்னுடைய கையில் திருமண அழைப்பிதழ் வாங்கினால் நன்றாக இருக்குமா இல்லையா என்று எனக்கு தெரியாது.

இன்னும் சற்று நேரத்தில் என்னுடைய அண்ணன் சக்கரபாணி வருவார் அவரிடம் இந்த அழைப்புகளை கொடுங்கள், கண்டிப்பாக நான் உங்கள் மகளின் திருமணத்திற்கு வருவேன் என்று அரவணைப்போடு எம்ஜிஆர் கூறியுள்ளார். அண்ணன் வந்ததும் பத்திரிக்கையை கொடுத்த அந்த நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாயை தாம்பூலத்தில் வைத்து மகளின் திருமணத்திற்காக எம்ஜிஆர் கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அழைப்பிதழை கொண்டு வந்த அந்த நபர் எம்ஜிஆரை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இத்தகைய நல்லெண்ணம் கொண்டதால் தான் எம்ஜிஆர் மறைந்த பிறகும் இன்றும் பலரின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
