தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.
எம் ஜி ஆரின் புகழ் திமுகவுக்கும், திமுகவின் தொண்டர்படை எம் ஜி ஆரின் சினிமா வெற்றிக்கு பரஸ்பரம் உதவின. ஆனால் ஒரு கட்டத்தில் எம் ஜி ஆர் திமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார். திமுகவின் பெயரோடு அண்ணா வை சேர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கப்பட்து.
அந்த காலகட்டத்தில் எம் ஜி ஆருக்கு திரையுலகில் மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது. அப்போது அவரே தன்னுடைய சொத்துகளை எல்லாம் அடமானம் வைத்து எடுத்து வெளியிட்ட படம்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. அந்த படத்தை மிகப் பிரம்மாண்டமாக வெளிநாடுகளில் படமாக்கினார், எம் ஜி ஆர்.
படத்தில் நான்கு கதாநாயகிகள், மூன்று வில்லன்கள் என கமர்ஷியல் பேக்கேஜாக உருவாக்கினார். படம் ரிலீஸ் ஆனபோது விளம்பரத்துக்கு ஒரு போஸ்டர் கூட ஒட்டப்படவில்லை. அதற்குக் காரணம் அப்போது போஸ்டர்கள் மீதான வரியை கலைஞர் தலைமையிலான அரசு அதிகரித்திருந்தது.
இப்படி பல சிக்கல்களுக்கு நடுவே உருவான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தைப் பார்க்க சென்ற ரசிகர்கள் முதல் பிரேமிலேயே ஆச்சர்யப்படத்தக்க வகையில் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவில் தன்னுடைய கட்சிக் கொடியை இணைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் எம்ஜி ஆர். அந்த காட்சி திரையில் தோன்றிய போதே ரசிகர்கள் அபாரமான கரகோஷத்தை தொடங்கினர். அதுவே அந்த படத்தின் வெற்றியை உறுதி செய்துவிட்டது.