தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத புகழின் உச்சியில் இருந்தவர் எம் ஜி ஆர். இன்னமும் கூட அவரளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் உருவாக முடியவில்லை. ஆனால் அவர் அந்த இடத்தை மிக எளிதாக அடைந்துவிடவில்லை. 1930 களிலேயே சினிமாவில் அறிமுகமானாலும் 50 களின் தொடக்கம் வரை அவருக்கு நல்ல வேடம் அமையவில்லை. பல படங்களில் துணை நடிகராகவே நடித்து வந்தார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம் ஜி ஆர், தமிழ் சினிமாவில் 1948 ஆம் ஆண்டு வெளியான ராஜகுமாரி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர்.
எம் ஜி ஆரின் கதாநாயக பிம்ப உருவாக்கத்தில் கதை வசனகர்த்தாவான கருணாநிதியின் பங்கும் குறிப்பிடத்தக்கது. தொடக்க காலத்தில் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கின. அப்படி அவர்கள் கூட்டணியில் உருவான ஒரு படம்தான் மருத நாட்டு இளவரசி.

#image_title
எம்ஜிஆரை முன்னணி ஹீரோவாக ஆக்கிய முக்கிய படங்களில் ஒன்றாக மருதநாட்டு இளவரசி அமைந்தது. கருணாநிதி கதை வசனம் எழுதிய இந்த படத்தை ஏ. காசிலிங்கம் இயக்கியிருப்பார். இந்த படத்தில்தான் வி.என். ஜானகி முதல் முறையாக எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்திருப்பார். எம்ஜிஆரின் சகோதரர் எம்.ஜி. சக்கரபாணி, பி.எஸ். வீரப்பா, சி.கே. சரஸ்வதி பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.
இந்த படம் வெளியான போது படத்தின் மீது பி கே முத்துசாமி என்பவர் கதைத் திருட்டு புகாரை வைத்தார். இந்த படத்துக்கு பி.கே. முத்துசாமி என்பவர் முதலில் கதை எழுதி, பின்னர் அது கருணாதியிடம் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த கதையை மெருகேற்றி கருணாநிதி வசனங்களை எழுதிக் கொடுத்தார். இந்நிலையில்தான் முத்துசாமி அவரது அனுமதியின்றி கதையை பயன்படுத்தி இந்த படத்தை உருவாக்கியதாகவும் குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டது. ஆனாலும் படம் வெற்றி பெற்ற வசனங்களுக்காக கருணாநிதி புகழப்பட்டார்.
தமிழ் சினிமாவில் இன்று பெருமளவில் விவாதிக்கப்படும் கதை திருட்டு சர்ச்சை 70 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு படத்திலும் சர்ச்சையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.