உடல் ஆரோக்கியத்திற்காக அனைவரும் தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொருவரின் வயது மற்றும் உடல்நிலையைப் பொறுத்து இந்த அளவீடு மாறுபடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, 5 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்கள் விளையாட்டுகள் மற்றும் ஓட்டப்பயிற்சி மூலம் 12,000 முதல் 16,000 அடிகள் வரை நடக்கலாம். அதேசமயம், 18 முதல் 64 வயதுடையவர்கள் தினமும் 7,000 முதல் 10,000 அடிகள் வரை நடப்பது அவர்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சர்க்கரை நோய் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
வயதானவர்கள் அதாவது 65 வயதைக் கடந்தவர்கள், தங்களின் உடல் வலிமைக்கு ஏற்ப 4,000 முதல் 7,500 அடிகள் வரை நடந்தாலே போதுமானது. இவர்கள் கீழே விழுந்து அடிபடாமல் மிதமான வேகத்தில் நடப்பதில் கவனம் செலுத்த வேண்டும். புதிதாக நடைப்பயிற்சியைத் தொடங்குபவர்கள் எடுத்தவுடனேயே நீண்ட தூரம் நடக்காமல், குறைந்த நேரத்திலிருந்து படிப்படியாக அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் அல்லது மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
