கடைசி நொடியில் ட்விஸ்ட்.. காதல் தோல்வி… லைவ் வீடியோவில் விஷம் குடித்த இளைஞர்.. நொடிப்பொழுதில் உயிரைக் காத்த மெட்டா AI..!!

By Soundarya on ஆனி 10, 2026

Spread the love

மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் உத்தரப் பிரதேச மாநில காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால், இன்ஸ்டாகிராமில் தற்கொலை வீடியோ வெளியிட்ட மீரட் இளைஞர் ஒருவர் கடைசி நொடியில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். உ.பி. மாநிலம் மீரட் மாவட்டத்தின் சர்தானா பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர், கடந்த ஜூன் 7 அன்று விஷத்தன்மை கொண்ட வெள்ளை நிற திரவத்தைக் குடிப்பது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் அந்தப் பதிவின் கீழே “Be happy in your life” (உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள்) என்ற வரிகளையும் அவர் பகிர்ந்திருந்தார்.

அவரது பதிவைக் கண்டறிந்த மெட்டா நிறுவனத்தின் AI தொழில்நுட்பம், உடனடியாக உ.பி. மாநில காவல் தலைமையகத்தின் சமூக வலைதள பிரிவுக்குத் தற்கொலை எச்சரிக்கை அனுப்பியது. மெட்டா வழங்கிய மொபைல் எண் மற்றும் ஐபி முகவரியை வைத்து, காவல்துறையினர் அந்த இளைஞர் இருக்கும் இடத்தை அடுத்த சில நிமிடங்களில் துல்லியமாகக் கண்டறிந்தனர். உடனடியாக சர்தானா பகுதி போலீசார் அவரது வீட்டிற்கு விரைந்தபோது, அந்த இளைஞர் விஷம் குடித்துவிட்டு உயிருக்குப் போராடும் நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார்.

   

போலீசார் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்ததால், தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலம் பெற்று வருகிறார். முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் காதல் தோல்வியால் கடந்த சில வாரங்களாகவே கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததால் இந்த தற்கொலை முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது. நவீன தொழில்நுட்பமும் காவல்துறையின் விரைவான செயல்பாடும் இணைந்து ஓர் இளம் உயிரைக் காப்பாற்றியுள்ள இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.