சிங்கப்பூரில் 14 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, தனது நண்பர்கள் மற்றும் அறிமுகமில்லாதவர்களுடன் கட்டாயப்படுத்தி மூவர் பாலியல் உறவில் ஈடுபடுத்திய 39 வயது நபரின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே சிறுவர்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றப் பின்னணி கொண்ட இவர், சிறையிலிருந்து விடுதலையான இரண்டு மாதங்களிலேயே 2022 ஜனவரியில் மொபைல் செயலி மூலமாக இந்தச் சிறுமியைச் சந்தித்துள்ளார். துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்த அந்த நபர், திருமணமானவர் என்பதையும் ஒரு மகன் இருப்பதையும் மறைத்து, விவாகரத்து செயல்முறையில் இருப்பதாகப் பொய் கூறி அச்சிறுமியுடன் பழகத் தொடங்கியுள்ளார்.
சிறுமியின் வயதை அறிந்திருந்தபோதிலும், அவரை நேரில் வரவழைத்துத் தவறாக நடந்து கொண்ட அந்த நபர், நாளடைவில் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். பள்ளிப் படிப்பை முடித்த அச்சிறுமியை அடுக்குமாடிக் கட்டிடத்தின் படிக்கட்டுத் தளத்திற்கு வரவழைத்து முதன்முதலில் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, மூவர் சேர்ந்து ஈடுபடும் பாலியல் உறவுக்குச் சம்மதிக்குமாறு அச்சிறுமியை வற்புறுத்தியுள்ளார். சிறுமி ஆரம்பத்தில் மறுத்தபோதிலும், உறவை முறித்துக் கொள்வதாக மிரட்டியும், குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கியும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
தன் காதலைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றிச் சம்மதித்த அச்சிறுமியை, 2022 முதல் 2024 வரை தனது நண்பர்கள் மற்றும் அறிமுகமில்லாதவர்களுடன் சேர்ந்து பலமுறை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியுள்ளார். ஒரு குறிப்பிட்ட செயலியைப் பயன்படுத்தி, அச்சிறுமியைத் தனது மனைவி எனப் பொய்யாக அறிமுகம் செய்து இந்த அத்துமீறல்களை அரங்கேற்றியுள்ளார். இதனிடையே, 2023-ல் தனது உண்மையான மனைவியை விவாகரத்து செய்த அந்த நபர், இக்குற்றங்கள் மூலம் பணமும் ஈட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
2025 ஏப்ரல்-ஜூன் இடைப்பட்ட காலத்தில் அச்சிறுமி இந்த நச்சு உறவிலிருந்து விலகி, அந்த நபரைத் தொடர்புகொள்ள முடியாதவாறு பிளாக் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், 2025 ஜூலை 2 அன்று சிறுமியை நேரில் சந்தித்துப் பலமுறை கடுமையாகத் தாக்கியுள்ளார். இத்தாக்குதலுக்குப் பிறகு சிறுமி நடந்த அனைத்து உண்மைகளையும் தனது தாயாரிடம் கூறவே, தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜூலை 3-ல் கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 14 அன்று நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அந்நபருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
