டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில், குடியிருப்பு சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இணைந்து, அப்பகுதியில் இருந்த சமூக நாய் ஒன்றை தடிகளால் கொடூரமாகத் தாக்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்தக் கொடூரமானச் சம்பவம் விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் கொந்தளிப்பையும், விலங்குகள் மீதான கொடுமைகள் குறித்த தீவிர கவலையையும் உருவாக்கியுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் விலங்குகள் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய வன்முறைகள் சட்டம் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரானது எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/indiain24hr/status/2114994343031586910/video/1
இச்சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. குற்றம் சாட்டப்பட்ட சங்க உறுப்பினர்கள் மீது விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
