தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகவே உள்ளது. அதிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் இணைந்த பிறகு மாற்று கட்சியினர் பலரும் கட்சி தாவி வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை டார்கெட் செய்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து வருகின்றார்.
இந்நிலையில் மாற்றுக் கட்சியினரைத் தொடர்ந்து தங்கள் கட்சியில் இணைத்து வரும் பணியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டு வரும் சூழலில் சேலம் சூரமங்கலம் பகுதி 20 ஆவது டிவிஷனில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த பலர் தமிழக வெற்றி கழகத்தில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் முன்னிலையில் இணைந்தனர். தேர்தல் நெருங்கும் சூழலில் நடந்த இந்த இணைப்பு அரசியலில் பரபரப்பு கிளப்பியுள்ளது.
