தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான மெகாஸ்டார் சிரஞ்சீவி, யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். ஏற்கனவே ரத்த வங்கி, கண் வங்கி போன்ற பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வரும் அவர், தற்போது நடிகர் சூர்யாவின் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ பணிகளால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளார். ஒரு குடும்பத்தில் ஒருவர் கல்வி கற்றால் அந்தத் தலைமுறையே முன்னேறும் என்ற உயரிய நோக்கத்தில் இந்தத் தொண்டுப் பணியைத் தொடங்குவதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த இலவசக் கல்வித் திட்டம் தெலுங்கு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, தேவைப்படும் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என சிரஞ்சீவி உறுதியளித்துள்ளார். இத்திட்டத்திற்கான பயனாளிகளைத் தேர்வு செய்யும் முறை மற்றும் செயல்பாடுகள் குறித்த முழுமையான விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன. திரைத்துறையில் ஒருவர் மற்றவருக்கு முன்னுதாரணமாக இருந்து இதுபோன்ற அறச்செயல்களில் ஈடுபடுவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
