மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் கூறி தவெக அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதில் தீவிரம்காட்டி வரும் நிலையிலும், அம்மாநில முதலமைச்சர் தமிழகப் பகுதிப் பங்கீட்டை வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த பின்னரும் முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பது வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் வரக்கூடாது என்பதற்காகவே முதலமைச்சர் வாய் திறக்க மறுப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு அரசு இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
அத்துடன் மேட்டூர் அணை திறக்கப்படாததால் பாதிக்கப்பட்ட 14 லட்சத்திற்கும் மேற்பட்ட குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணமும், மறுசாகுபடிக்குத் தேவையான இடுபொருட்களை மானியமாகவும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்தும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
