உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் என்ற பெண், டேட்டிங் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி ஆண்களை வலையில் வீழ்த்தும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில் சாதாரண நட்பாக பழகி, பின்னர் அவர்களை அந்தரங்கமாக சந்தித்து ரகசியமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொள்வதை இவர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவருடைய இந்த குற்றச் செயலுக்கு மேலும் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.
ரகசியமாக எடுக்கப்பட்ட அந்தரங்க காட்சிகளைக் காட்டி, தன்னிடம் சிக்கிய தொழிலதிபர்கள் மற்றும் வசதிபடைத்த ஆண்களிடம் இவர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். கேட்ட பணத்தைக் கொடுக்காவிட்டால், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி போன்ற பொய் வழக்குகளை பதிவு செய்துவிடுவதாக அச்சுறுத்தி இதுவரை சுமார் 6 கோடி ரூபாய்க்கும் மேல் சுருட்டியுள்ளார். பணத்தை தர மறுத்த சிலரை காவல்நிலையத்தில் பொய்யான புகார்கள் அளித்து சிக்கவைத்துள்ளதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
சமீபத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த மெகா மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கிடையில், தான் மோசடி செய்து சம்பாதித்த பணக்கட்டுகளை படுக்கையில் பரப்பி அதன்மீது படுத்திருக்கும் வகையிலும், கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் வகையிலும் பல்லவி சிங் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
