மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தடயங்களை அழித்துவிட்டுத் தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்க மதுரை மாநகர காவல்துறையின் 9 தனிப்படைகள் தீவிர விசாரணையில் இறங்கின. கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில், இக்கொள்ளையில் தொடர்புடைய நிஷாந்த், அவரது காதலியும் யூடியூபருமான மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, இவ்வழக்கில் கைதான மீனாட்சியைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்பி வந்தனர். இது குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை தல்லாகுளம் காவல் நிலையத்திலும், கட்சி நிர்வாகிகள் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தனர். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தல்லாகுளம் காவல்துறையினர், தவறான தகவல்களைப் பரப்பிய 20 சமூக வலைதள கணக்காளர்களுக்கு டிஜிட்டல் நோட்டீஸ் அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
