“காங்கிரஸ் சீட்டை தூக்கிய திமுக”… கூட்டணிக்குள் நடந்த திரைமறைவு அரசியல் உண்மையைப் போட்டுடைத்த துரை வைகோ….!

By Nanthini on புரட்டாதி 12, 2026

Spread the love

இணைப்புக் கட்சிகளின் வேட்பாளர் தேர்வில் திமுக தலையிட்டதால், காங்கிரஸ் தலைமைக்கு திமுக மீது கடும் வெறுப்பு ஏற்பட்டது என மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் அருகே கே.கள்ளிக்குடியில் ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தைத் திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்குள் நிலவிய இந்த உட்கட்சி விவகாரங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்துப் பேசிய அவர், 1975–77 அவசரநிலைக் காலத்தில் அன்றைய இந்திரா காந்தி அரசால் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் முதன்முதலில் கைது செய்யப்பட்டவரும் கடைசியாக விடுவிக்கப்பட்டவரும் வைகோதான் என்று சுட்டிக்காட்டினார். அரசியல் நாகரிகம் கருதி தனிமனிதத் தாக்குதல்களில் ஈடுபட விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஊடகங்கள் முடிந்துபோன விவகாரங்களைத் தொடர்ந்து எழுப்பாமல், மாநில வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கேள்விகள் கேட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

   

தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியை மாநிலத்தின் இரண்டாம் தலைநகராக அல்லது நிர்வாகத் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். “சென்னை நிதி சார்ந்த மையமாகவும், திருச்சி நிர்வாகத் தலைநகரமாகவும் மாறினால் சென்னையின் மக்கள் தொகை நெரிசல் மற்றும் ரியல் எஸ்டேட் விலைகள் குறையும். மேலும், தெற்கு மற்றும் கொங்கு மண்டல மக்கள் சில மணி நேரங்களிலேயே தலைமைச் செயலகத்தை அடைய முடியும்” என்றும், திருச்சியில் உள்ள 2,000 ஏக்கர் அரசு நிலம் இதற்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

   

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றச்சூழல் சார்ந்த திட்டங்கள் குறித்துப் பேசிய துரை வைகோ, சென்னை பட்டினப்பாக்கம் மீனவர்களின் குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டங்களை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். அதேபோல் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் விவசாய நிலங்களும் நீர்நிலைகளும் பாதிக்கப்படும் என்பதால், மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு அத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

தனியார் பல்கலைக்கழகங்களுக்கான நிலப்பரப்பு விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள தளர்வுகள் குறித்துக் கவலை தெரிவித்த அவர், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் பறிபோகக் கூடாது என்றார். அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களே ஏழை எளிய மாணவர்களுக்குப் பாதுகாப்பாக விளங்குவதால், தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியால் விளிம்புநிலை மாணவர்களின் கல்விப் பாதிப்படையாத வண்ணம் மாநில அரசு உரிய நடவடிககை எடுக்க வேண்டும் எனக் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.