சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தன் வரலாற்றிலேயே முதன்முறையாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளால் ஏற்பட்டுள்ள இந்த முன்னெப்போதும் இல்லாத பற்றாக்குறை காரணமாக, தற்போது ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் நிலுவை தொகைகளைக் கூட வழங்க முடியாமல் சிஎம்டிஏ திணறி வருகிறது. இதன் காரணமாக, அன்றாடச் செலவினங்களைச் சமாளிக்க மாநில அரசிடம் சுமார் ரூ. 200 கோடி வரை அவசர நிதி உதவி கோரி விண்ணப்பிக்கும் நிலைக்கு இந்த அமைப்பு தள்ளப்பட்டுள்ளது.
சிஎம்டிஏவின் இந்த திடீர் வீழ்ச்சிக்கு, அதன் முதன்மைப் பணிகளுக்கு அப்பாற்பட்டு, தன் சொந்த நிதியைக் கொண்டு சம்பந்தமில்லாத பிற உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் மட்டும் நூலகங்கள், ‘முதல்வரின் படைப்பகங்கள்’, திருமண மண்டபங்கள், பேட்மிண்டன் விளையாட்டுத் திடல்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற கட்டுமானப் பணிகளுக்காகச் சுமார் ரூ. 3,000 கோடி வரை சிஎம்டிஏ அள்ளி வீசியுள்ளது. தங்களின் நிதி நிலைமையைக் கணக்கில் கொள்ளாமல், அரசியல் காரணங்களுக்காக இந்தத் திட்டங்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டு, தற்போது சென்னை மாநகராட்சி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையங்களிடம் ஒப்படைக்கப்படத் தயாராக உள்ளன.
இந்தத் திட்டங்களால் சிஎம்டிஏவுக்கு தற்போது சுமார் ரூ. 3,500 கோடி வரை ஒட்டுமொத்த நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், சுமார் ரூ. 1,500 கோடி வரை நெகட்டிவ் பேலன்ஸ் எனப்படும் பற்றாக்குறை கணக்காக மாறியுள்ளது. பொதுவாக, திட்ட அனுமதி மற்றும் நிறைவுச் சான்றிதழ்களை வழங்குவதன் மூலம் கிடைக்கும் மிகக் குறைந்த கட்டணமே சிஎம்டிஏவின் முக்கிய வருவாயாகும். அந்த வருவாய் வழக்கமாக ஊழியர்களின் ஊதியச் செலவுகளுக்கே சரியாக இருக்கும் நிலையில், முறையான திட்டமிடலின்றி கோடிக்கணக்கான ரூபாய் நிதியை மடைமாற்றியதால் இந்த தன்னாட்சி அமைப்பு முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்த மோசமான நிதி நெருக்கடியின் விளைவாக, ஏற்கனவே சிஎம்டிஏ சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு புதிய திட்டங்களைக் கைவிடும் முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. நிதிச் சுமையைக் குறைப்பதற்காக, எந்தெந்த திட்டங்களை உடனடியாகக் கைவிடலாம் என்பது குறித்து உயர் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை வரலாற்றில் ஒருமுறை கூட மாநில அரசிடம் கையேந்தாமல், தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்து வந்த சிஎம்டிஏ, இன்று தவறான நிதி நிர்வாகத்தால் தன் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவும், அரசு வழங்கும் மானியங்களையும் உதவிகளையும் மட்டுமே நம்பி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
