உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள பெய்கராஜ் பூர் மருத்துவக் கல்லூரியின் விடுதி அறையில் 24 வயது எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தைச் சேர்ந்த ஷகுன் சைனி என்ற அந்த மாணவி, விடுதி அறை நீண்ட நேரமாக உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியாளர்கள் பின் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினரும் தடயவியல் நிபுணர்களும் கதவை உடைத்து உள்ளே சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவிதமான கடிதமும் கிடைக்காத நிலையில், காவல்துறையினர் மாணவியின் செல்பேசியைக் கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
