பாட்டெழுத திணறிய மருதகாசி, கண்ணதாசன்.. தீர்த்து வைத்த பட்டுக்கோட்டையார்.. கிடைத்த மிகப்பெரிய சன்மானம்..

By Archana

Published on:

காலத்தால் அழியாத பல தத்துவ பாடல்களை நமக்கு தந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். சிறந்த தமிழ் அறிஞர், சீர்த்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி பாடியது தான் இவருடைய சிறப்பு. 19 வயதிலேயே கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர், உணர்ச்சிகளை தனது கவிதையில் கொட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசை கனவுகளையும், ஆவேசத்தையும், பாடல்களாக வடித்தவர். திரையுலகில் 180 பாடல்களையே எழுதினாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக அமைந்தவை.

   

அப்படி அவர் பாசவலை படத்திற்காக எழுதிய பாடல் கதையே ஒரு சுவாரஸியமான நிகழ்வு. 1956-ம் ஆண்டு எம்.கே.ராதா, வரலஷ்மி, எம்.என்.ராஜம் உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாசவலை. ஏ.எஸ்.நாகராஜன் இயக்கத்தில், விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையில் உருவாகி இருந்தது இப்படம். இப்படத்தில் பாடல் எழுதும் பொறுப்பு கவிஞர் மருதகாசியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்படி அவர் பாடல் எழுதும் போது, ஒரே ஒரு தத்துவப் பாடலை எழுதுவதற்கு மட்டும் அவரால் முடியவில்லை.

அதற்காக கண்ணதாசனை அழைத்துள்ளனர். அவரும் அந்தப் பாடலை எழுத எவ்வளவோ சிந்தனை செய்துள்ளார். ஆனால் இரண்டு பேராலும் அந்த தத்துவப் பாடலை எழுத முடியவில்லை. அடுத்து அந்த வாய்ப்பு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு செல்கிறது. அப்படி அவர் எழுதிய பாடல் தான், ”குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம், குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்கு சொந்தம், தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்” என்ற பாடல். இந்தப் பாடல் வரிகளை பார்த்து பிரம்மித்துப் போன மருதகாசி, அப்படத்திற்காக வாங்கிய சம்பளத்தை முழுவதுமாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கே வழங்கிவிட்டாராம்.

 

author avatar
Archana