நெஞ்சை உலுக்கும் சோகம்.. கென்யாவில் பெண்கள் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து.. 16 மாணவிகள் பரிதாப பலி..!

By Swetha on வைகாசி 28, 2026

Spread the love

மத்திய கென்யாவின் நாகுரு மாகாணம், கில்கில் பகுதியில் உள்ள உதுமிஷி பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் நள்ளிரவுக்குப் பிறகு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது சுமார் 220 மாணவிகள் அந்த விடுதி கட்டிடத்தில் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாகப் பரவிய தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே குறைந்தது 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தில் காயமடைந்த 79 மாணவிகள் மீட்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்புப் படையினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் பயம் மற்றும் பதற்றத்தில் பல மாணவிகள் இருட்டில் வெளியே ஓடி ஒளிந்ததால், அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

   

தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை; இது குறித்து போலீஸாரும் குற்றப் புலனாய்வுத் துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கென்யாவில் உள்ள பள்ளி விடுதிகளில் மின் கசிவு அல்லது திட்டமிட்ட தீவைப்பு போன்ற காரணங்களால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.