திடீரென முடக்கப்பட்ட மெரினா…. அலர்ட்டான போலீஸ்…. பொதுமக்கள் உள்ளே செல்லத் தடை… சென்னையில் உச்சகட்ட பரபரப்பு….!

By Nanthini on ஆடி 23, 2026

Spread the love

சென்னை மெரினா கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் திரளக் கூடும் என்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்கள் செல்ல போலீஸார் திடீர் தடை விதித்துள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் தீவிர போராட்டங்களின் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் பல்வேறு அமைப்பினரும் மாணவர்களும் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மெரினாவில் 2017-இல் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்றதொரு சூழல் மீண்டும் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக, இரண்டு துணை ஆணையர்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் குரல் கொடுக்கும் வகையில் தமிழகத்திலும் மாநிலக் கல்லூரி, நியூ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை அலுவலகத்திலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

   

கடந்த புதன்கிழமை சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே அனுமதி பெறாமல் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 195 பேர் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டனர். இதுமட்டுமன்றி, தமிழகம் முழுவதும் சுமார் 32 இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட 2,500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜ், கவிஞர் வைரமுத்து போன்ற பிரபலங்களும் நீட் தேர்வை ரத்து செய்வதே இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாகும் எனத் தங்களது ஆதரவுக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

   

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மெரினா மணற்பரப்பு, சர்வீஸ் சாலை மற்றும் அருகிலுள்ள ரயில் நிலையங்களில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளனர். கடற்கரைக்கு வந்த பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் தடுப்புகளை அமைத்து உள்ளே செல்ல விடாமல் போலீஸார் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் மெரினா கடற்கரைப் பகுதி முழுவதும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டு, அப்பகுதியில் தொடர் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது.