மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் த.வெ.க. வேட்பாளராகப் போட்டியிடும் மரகதம் குமரவேல், சிறுநல்லூர் ஸ்ரீமாரி எல்லையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். கிராம மக்கள் அவருக்கு மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் போது, மாரியம்மன் மற்றும் பொதுமக்கள் சாட்சியாகத் தொகுதி மக்களுக்கு நேர்மையுடன் சேவை செய்வேன் என சத்தியம் செய்து அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதேவேளையில், வீராணக்குன்னம் பகுதியில் மரகதம் குமரவேல் பிரச்சாரத்திற்குச் சென்றபோது, ஊருக்குள் வரக்கூடாது எனக் கூறி ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, பிரச்சாரப் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தற்போது காவல்துறையின் தீவிர பாதுகாப்பிற்கு இடையே அவர் மதுராந்தகம் தொகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
