நடிகர் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி காலை உடல்நலக்குறைவால் மறைந்தார். அவரது உடல் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டது. நடிகர், நடிகையர், கட்சியினர், தொண்டர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அன்றிரவு 10 மணியளவில் நடிகர் விஜய், அங்கு வந்தார். கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட அவர் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். பின், விஜயகாந்த் உடல் அருகே நின்று கண் கலங்கிய அவர், மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சென்றார். பிரேமலதா, அவரது மகன்களிடம் துக்கம் விசாரித்தார்.

அப்போது காரை நோக்கிச் சென்ற அவர் காருக்குள் ஏறி அமர்ந்த போது, காரை நோக்கி செருப்பு ஒன்று பறந்து வந்தது. அதை பார்த்து சட்டென லாவகமாக பிடித்த ஒருவர், அதை செருப்பு வந்த திசை நோக்கியே திரும்ப வீசிவிட்டார். விஜய் கார் மீது அந்த செருப்பு விழவில்லை. எனினும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் அந்த வீடியோ வைரலானது. உடல்நலக்குறைவால் கேப்டன் இருந்த போது விஜய் வந்து நலம் விசாரிக்காததால், இப்படி யாரோ செய்துவிட்டதாக பேசப்பட்டது.

இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், அந்த மாதிரி யாரும் திட்டமிட்டு அதை செய்திருக்க வாய்ப்பில்லை. கூட்டத்தில் யாரோ விஷமிகள் செய்த வேலை அது. அது ஒரு ஹைவே. அந்த வழியாக போற வர்ற மக்கள் எல்லோருமே கலந்துக்கிற ஒரு இடம். அதுல விஷமிகள் யாரோ இதை செய்திருப்பார்கள். அது உண்மையில் விருப்பு வெறுப்பு சார்ந்த விஷயமாக நாம் அதை கணக்கில் எடுக்க கூடாது.
கேப்டன் மீது விஜய் பேரன்பு மிக்கவர். கேப்டன் கூட அவர் நடித்தவர். கேப்டன் அவரை வளர்த்து விட்டவர், என்று விஜய்க்கும், கேப்டன் ரசிகர்கள், தொண்டர்களுக்கு ஆதரவாகவும் இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.
