‘அறம்’ முதல் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ வரை… ஒரே கதையை வெவ்வேறு விதமாகக் கையாண்ட இயக்குனர்கள்..

By vinoth on மார்ச் 11, 2024

Spread the love

கமல்ஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்தில் முக்கியமானக் காட்சிகளை உருவாக்கிய குகைக் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. கொடைக்கானலில் மனித நடமாட்டம் இல்லாத அந்த குகை அதன் பின்னர் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து குணா குகை என்றே அழைக்கப்பட்டு வந்தது.அங்கு வந்த சுற்றுலா பயணிகளில் 13 பேர் இதுவரை அங்குள்ள ஆழ்குழிகளில் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. அதனால் இப்போது அந்த குகை பாதுகாப்பு வசதிகள் பொறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அப்படி 2006 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குணா குகைக்குள் சிக்கிய போது அவரது நண்பர் குட்டன் உயிரைப் பணயம் வைத்து உள்ளே சென்று தூக்கி வந்ததை  மஞ்சும்மள் பாய்ஸ் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கி கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியிட்டிருந்தனர். இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிரிபுதிரி ஹிட்டாகியுள்ளது.

   

உலகெங்கும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் சர்வைவல் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் குணா படத்தில் இடம்பெற்ற பாடலை உச்சபட்சமான காட்சி ஒன்றில் சேர்த்து உருவாக்கியது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் மொமண்ட்டாக அமைந்துள்ளது. இந்த படம் இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

   

இந்நிலையில் இதே பாணியில் இதற்கு முன்னர் வெளியாகி ஹிட்டான இரண்டு படங்கள் இப்போது மீண்டும் நினைவு கூறப்படுகின்றன. 1990 ஆம் ஆண்டு மலையாள இயக்குனர் பரதன் இயக்கத்தில் ஜெயராம் மற்றும் பேபி ஷாமிலி நடிப்பில் உருவான திரைப்படம் மலூட்டி. ஆழ் துளைக்குள் குழந்தை மலூட்டி விழுந்துவிட, அதை அவளின் தந்தை எப்படி போராடி மீட்கிறார் என்பதே மலூட்டி படத்தின் கதை. பரபரப்பாக அமைந்த அதன் திரைக்கதை காரணமாக இந்த படம் வெற்றியைப் பெற்றது.

 

இதே பாணியில் 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அறம் கோபி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘அறம்’. இந்த படமும் குழிக்குள் விழுந்த குழந்தையைக் காப்பாற்றுவது பற்றியதுதான் என்றாலும், இதில் மற்ற இரு படங்களைப் போல திரில்லர் அம்சத்துக்கு இயக்குனர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. படத்தில் எளிய மக்களின் பாதுகாப்பு அம்சங்களில் அரசு எந்திரம் காட்டும் அல்ட்சியத்தை சாடியிருந்தார் இயக்குனர். இந்த படமும் மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.