காதலும் கடந்து போகும், காலா ,விக்ரம் வேதா போன்ற பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். அதன் பின்னர் அவர் ஜெய் பீம் படத்தில் நடித்த ராஜாக்கண்ணு கதாபாத்திரம் அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்று அவரை ஒரு நடிகராக அங்கீகரிக்க வைத்தது.
மணிகண்டன் நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் . இவர் இயக்கிய “நரை எழுதும் சுய சரிதம்” என்ற திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. அதன்பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த ‘குட்னைட்’ படம் பெரிய வெற்றியைப் பெற்று அவரைக் கதாநாயகன் ஆக்கியது.

அதன் பின்னர் அவர் நடித்த லவ்வர் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இப்போது ‘குடும்பஸ்தன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது.
மணிகண்டனின் நடிப்பைப் போலவே அவரது நேர்காணல் பேச்சுகளும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. விஷயங்களை, சம்பவங்களை அவர் எடுத்துரைக்கும் பாங்கு ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்து வருகிறது. அதே போல ரஜினிகாந்த், கமல்ஹாசன், டெல்லி கணேஷ், ஹனிபா போல பல நடிகர்களை மிமிகிரி செய்து வருகிறார். அவரின் மிமிக்ரி தத்ரூபமாக இருப்பதால் அதற்கெனவே ஒரு ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது.

ஆனால் அவர் மிமிக்ரி நன்றாக செய்கிறார் என்பதற்காக அவர் கொடுக்கும் எல்லா நேர்காணல்களிலும் அவரை மிமிக்ரி செய்ய சொல்லி தொகுப்பாளர்கள் சொல்ல அவரும் மிமிக்ரி மாரத்தானையே செய்து வருகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் இது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் மிமிக்ரி மாரத்தான் போதும் என ரசிகர்கள் இப்போது அவரது வீடியோவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். இதையுணர்ந்த மணிகண்டன் தானே சில இடங்களில் அதிகமாகப் பேசுவதைப் போல உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
