கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருண் விக்னேஷ் மீது, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் ஊடகங்களிடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ தான் தவறு செய்யவில்லை என்றும், தனது கைபேசி மற்றும் சிசிடிவி காட்சிகளைச் சோதித்துப் பார்க்குமாறும் தெளிவாக மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் மறுத்த பிறகும், அவரை முன்கூட்டியே குற்றவாளியாகச் சித்தரித்து ஊடக விசாரணை நடத்துவது நியாயமற்றது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளின் அடிப்படையில் ஒருவரை உடனே குற்றவாளியாக்கக் கூடாது என்று கூறிய மாணிக்கம் தாகூர், “மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு முதல்முறை எம்.எல்.ஏ-வை இதுபோன்று சித்தரிப்பது வேதனை அளிக்கிறது. இதில் யார் உத்தியோகபூர்வமாக புகார் அளித்திருக்கிறார்கள்? ஆட்சியர் தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்ததாகக் கூறப்படும் தகவலுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நிர்வாக ரீதியான உரையாடல்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பொதுவெளியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெண்களைப் பற்றிப் பேசிய பேச்சையும், இந்த விவகாரத்தையும் ஒப்பிடுவதைக் கடுமையாகக் கண்டித்தார். “தஞ்சாவூரில் 2,000 பேருக்கு முன்னால் உதயநிதி பேசிய அருவருப்பான பேச்சுக்கு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விஷயத்தில் அப்படி ஏதேனும் நேரடி சாட்சிகளோ அல்லது ஆதாரங்களோ இருக்கிறதா? இல்லாத ஒன்றையும், ஆதாரம் உள்ள ஒன்றையும் ஒப்பிட்டுப் பேசுவது முற்றிலும் தவறானது” என்று அவர் தெரிவித்தார்.
இறுதியாக, தான் யாருக்கும் பரிந்துரைத்துப் பேசவில்லை என்று தெளிவுபடுத்திய அவர், வாட்ஸ்அப் தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு அவசரப்பட்டு தீர்ப்பு எழுதுவதை ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். சட்டமன்ற உறுப்பினர் அளித்த விளக்கத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல், அவரை முன்முடிவோடு குற்றவாளியாகக் சித்தரிக்கும் போக்கு ஜனநாயக முறைக்கு எதிரானது என்றும் மாணிக்கம் தாகூர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
