தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் விமர்சனங்களுக்கும், தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷின் பேச்சுக்கும் விளக்கமளித்துப் பதிலளித்தார்.
சட்டமன்ற நிகழ்வுகள் பிக்பாஸ் போல் இருப்பதாக சீமான் கூறிய குற்றச்சாட்டிற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், “சீமான் பொழுதுபோக்குத் துறையில் இருந்து வந்தவர் என்பதால் எல்லாவற்றையும் பொழுதுபோக்காகப் பார்க்கிறார். அண்ணன் சீமான் எப்போதும் குறைகளை மட்டுமே சொல்வதற்காகப் பிறந்தவர்” என்று குறிப்பிட்டதுடன், வரலாற்றிலேயே முதல்முறையாகச் சட்டமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவதை அனைவரும் வரவேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து ரீல்ஸ் மற்றும் நவீன ஊடகங்கள் குறித்துப் பேசிய அவர், “ஊடகங்களின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியே ரீல்ஸ் ஆகும். விடிய விடிய கட்சியின் பொதுக்கூட்டங்கள் நடந்த காலம் மாறி, ஒரு கருத்தை 30 நொடிகளுக்குள் சுருக்கமாகச் சொல்லும் சூழல் உருவாகியுள்ளது. ரீல்ஸாக மாறுவதற்காக சில நிகழ்வுகள் நடந்தாலும், அவை காலப்போக்கில் சரியாகிவிடும்” எனத் தெரிவித்தார்.
அடுத்ததாக, 2029-ல் விஜய்யை ராகுல் காந்தி பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் என்ற தவெக எம்.எல்.ஏ கனிமொழியின் பேச்சு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஜோதிடர்கள் சொல்வதையெல்லாம் பெரிதாக்கத் தேவையில்லை” என்று பதிலளித்தார். மேலும், “மாற்றத்தை விரும்பிய மக்களின் வாக்குகளால் விஜய் வென்றுள்ள நிலையில், அவர் ஊழலற்ற ஆட்சியைத் தர முயல்கிறார். ஆனால், ஊழல் செய்தவர்கள் இணைந்து அவர் செய்ய வந்த நல்ல பணிகளைச் செய்யவிடாமல் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை ராகுல் காந்திதான் நாட்டின் பிரதமர் வேட்பாளர், விஜய் முதலமைச்சராகத் தொடர்ந்து நல்லாட்சி வழங்க வேண்டும்” எனக் கூறித் தன் பேச்சை முடித்தார்.
