2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் கழகம், அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அரசை அமைத்தது. இந்தச் சூழலில், காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை பனையூரில் முதல்வர் விஜய் தலைமையில் ஆதரவுத் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காத நிலையில், பங்கேற்ற கட்சிகள் இணைந்து தங்களின் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’ என அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டின.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், இக்கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடரும் என்றும், வரவிருக்கும் இடைத்தேர்தல், உள்ளாட்சி மற்றும் மக்களவைத் தேர்தல்களிலும் இணைந்து களம் காணும் என்றும் தெரிவித்தார். மேலும், தேசிய அளவில் இயங்கும் ‘இந்தியா’ கூட்டணியின் ஓர் அங்கமாகவே இக்கூட்டணி செயல்படும் எனக் குறிப்பிட்ட அவர், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்றும் கூறினார்.
எனினும், மாணிக்கம் தாகூரின் இந்த தன்னிச்சையான வேட்பாளர் குறித்த அறிவிப்பு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடையே அதிருப்தியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் விஜய்யும் தவெகவும் இருக்கும் நிலையில், வேட்பாளர் தேர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலைக் கூட்டணி தலைமை அறிவிப்பதற்கு முன்பாகவே காங்கிரஸ் தலைவர் முந்திக்கொண்டு அறிவித்திருப்பது முறையான அரசியல் நடைமுறை அல்ல என்ற ஆதங்கம் தவெக தரப்பில் எழுந்துள்ளது.
அதிமுகவும் திமுகவும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், தவெக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்தச் சிறிய கருத்து வேறுபாடு அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் தவெக அரசுக்கு, கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதும் வேட்பாளர் தேர்வை சுமுகமாக முடிப்பதும் தற்போதைய முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது.
